முழு மதுவிலக்கு கள்ளச்சாராயத்துக்கு வழிவகுக்கும் – உச்ச நீதிமன்றம்

கள்ளச்சாராய சாவுகளை தடுப்பதற்காக மெத்தனாலில் கட்டாயமாக நிறமூட்டி மற்றும் கசப்புச் சுவையூட்டும் பொருள்களை கலக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா நச்சு விதிகளின் கட்டுப்பாடுகளை எதிர்த்து பாலாஜி பார்மலின் பிரைவேட் லிமிடெட் உட்பட பலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதில், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லாது. இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் தொழில்துறையையே பாதிக்கும் வகையில் மரத்தை பாதுகாக்க தவறிக் காட்டை இழந்த கதையாக முடிந்துவிடும். கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க முழுமையான மதுவிலக்கு உதவுமா என்றால் அதில் ஒரு சில கருத்துக்கள் உள்ளது. அதாவது கட்டாயக் கட்டுப்பாடுகள் மூலம் மதுப்பழக்கத்தைக் குணப்படுத்த முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது மது வணிகத்தை நிலத்தடிக்கு கொண்டு சென்று, ஆபத்தான மற்றும் கட்டுப்பாடற்ற கள்ளச்சாராய உற்பத்தியை மட்டுமே அதிகரிக்கும். எழுத்தாளர் மார்க் டிவைனின் புகழ்பெற்ற வரிகளான மதுவிலக்கு என்பது குடிப்பழக்கத்தை மூடிய கதவுகளுக்குப் பின்னாலும், இருட்டான இடங்களுக்கும் கொண்டு செல்கிறதே தவிர, அதைக் குணப்படுத்தவோ குறைக்கவோ இல்லை என்பதை இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதைத்தவிர வரி வருவாய் இழப்பு, அமலாக்கத்திற்கான கூடுதல் செலவு, காவல்துறை மற்றும் கலால் துறையில் லஞ்சம் ஊழல், சட்டவிரோத சாராய உற்பத்தி, போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு ஆகிய ஐந்தும் பெரும் தீமைகளை முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்துகிறது. கடந்த 1960ல் கடுமையான மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெரிய கள்ளச்சாராய விபத்துகள் நடந்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தின் பாவ்நகர் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியில் அண்மையில் நடந்த சாவுகளும் அதற்கு அடையாளமாகும். இருப்பினும் கள்ளச்சாராயங்களை கட்டுப்படுத்த சில யோசனைகளை மேற்கொள்ளலாம். அதில், மெத்தனாலில் கசப்புச் சுவையூட்டுவது குடிப்பவர்களின் தேவையை தடுக்காது. எனவே, கலால் சட்டங்களின் கீழ் மெத்தனால் போக்குவரத்து மற்றும் சேமிப்பை கடுமையாக்க வேண்டும்.

சட்டவிரோதமாக சாராய போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை, நீதிமன்ற உத்தரவு வரும் வரை டுவிக்கக் கூடாது. கள்ளச்சாராய அவசர சூழல்களை கையாள மாநில சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு பிரிவும், அவசரகால பேரிடர் மேலாண்மை கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும். கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியை உடைக்க பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.