ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் கேள்வி கேட்கிறது

ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்திய அரசு எப்போது நிதியளிப்பதை நிறுத்தும்?” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துக் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?” என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.பதிலளித்த சில நிமிடங்களிலேயே, அமைச்சரும் பிற பிரதிநிதிகளும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினர். ஆனால், அந்தப் பாகிஸ்தான் பத்திரிகையாளர் தொடர்ந்து அங்கேயே கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 2025 ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. முசாபராபாத், கோட்லி, பஹாவல்பூர், ராவலாகோட், சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டன.

இந்தியாவில் பல தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெயீஷ்-இ-முகமது (JeM) உள்ளிட்ட குழுக்களுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்பு மையங்கள் மீது இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தாக்கப்பட்ட ஒன்பது இடங்களில், ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு இடங்கள் பாகிஸ்தானின் பிரதான பகுதியிலும் அமைந்திருந்தன.இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பஹாவல்பூர் நீண்டகாலமாக ஜெயீஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய இடமாகவும், அந்த அமைப்பின் முக்கியத் தளமாகவும் இருந்து வந்துள்ளது. முசாபராபாத் மற்றும் பிம்பர் ஆகிய இடங்களும் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கான போக்குவரத்து மற்றும் தளவாடப் புள்ளிகளாகப் பாதுகாப்பு அமைப்புகளால் முன்னரே அடையாளம் காணப்பட்டவை ஆகும்.புதன்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசிய இந்தியத் தூதர் க்ஷிதிஜ் தியாகி, “பாகிஸ்தான் பிற நாடுகளுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கைப்பற்ற நினைப்பதையோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையோ விட்டுவிட்டு, தனது நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய தியாகி, “பாகிஸ்தான் பிற நிலப்பரப்புகளை விரும்பாமல் அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யாமல், நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே அதன் மக்களுக்குச் செய்யும் நல்ல சேவையாகும்; ஏனெனில் இவைகளோ அல்லது இந்தப் பேரவையில் அது செய்யும் நாடகங்களோ, அதன் பொருளாதாரம் வாழ வழிவகுத்துள்ள கடன்களை அடைக்க உதவாது” என்று காட்டமாகக் கூறினார்.

ஜூன் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையை பாகிஸ்தான் சரியாகக் கையாளத் தவறிவிட்டதாகவும் தியாகி குற்றம் சாட்டினார்.

இந்தியத் தூதர் க்ஷிதிஜ் தியாகி மேலும் கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா சபையில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஜூன் மாதம் முதல் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்பட்டது, உணவு மற்றும் மருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டது ஆகியவை குறித்துத் தெரிவிக்கப்பட்டது” என்றார்.அப்போது பாகிஸ்தான் தரப்பு, அந்த குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான பதிலோ அல்லது விளக்கமோ அளிக்காமல், ‘அவையின் நடைமுறை விதிகளைச் சுட்டிக்காட்டி’ (Point of Order) விவாதத்தைத் திசைதிருப்ப முயன்றது.இதைச் சாடிய இந்தியத் தூதர், “நாங்கள் இவ்வளவு கடுமையான மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டும்போது, பாகிஸ்தானிடம் இருந்து வந்த ஒரே பதில் நடைமுறைப் பிரச்சினை மட்டும்தான்; உண்மையான பதிலைக் கூற அவர்களிடம் வழியில்லை. இந்த அவையின் முழுமையான ஆய்வுக்குத் தகுதியான நாடு என்றால் அது பாகிஸ்தான் மட்டுமே” என்று கேலியாகச் சுட்டிக்காட்டினார்.