சபரிமலை 56 பவுன் தங்க கிரீடம் மாயமா..?

திருவனந்தபுரம்: தமிழக பக்தர் சபரிமலைக்கு காணிக்கையாக கொடுத்த 56 பவுன் தங்க கிரீடம் காணாமல் போகவில்லை என்றும், சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தான் அது இருக்கிறது என்றும் திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் ஜெயகுமார் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் திருடப்பட்ட சம்பவம் சமீபத்தில் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் 3 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு தமிழக பக்தர் ஒருவர் வழங்கிய 55.75 பவுன் எடையுள்ள தங்க கிரீடம் மாயமானதாகவும், திருடப்பட்ட ஒரிஜினல் தங்க கிரீடத்திற்குப் பதிலாக அதேபோல ஒரு கவரிங் டூப்ளிகேட் கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் ஜெயகுமார் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் பக்தர் ஒருவர் காணிக்கையாக கொடுத்த 55.75 பவுன் எடையுள்ள தங்க கிரீடம் காணாமல் போனதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் கிடையாது. அந்த தங்க கிரீடம் சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தான் உள்ளது. இதை திருவாபரணம் ஆணையாளர் ஹரிலால் நேரில் ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த வைத்தியநாத சுவாமிகள் என்ற பக்தர் தான் இந்த தங்க கிரீடத்தை கடந்த 2012ம் ஆண்டு காணிக்கையாக கொடுத்தார். வருடம்தோறும் அவர் சபரிமலைக்கு வரும்போது அந்த தங்க கிரீடத்தை ஐயப்பனுக்கு அணிவித்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறுவார். அதனால் தான் அந்த கிரீடத்தை ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லாமல் சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்திருந்தோம்.

அந்த பாதுகாப்பு அறையில் சமீபத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது அந்த தங்க கிரீடம் உள்பட சில பொருட்கள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டிருந்தன. அதனால் தான் நீதிபதிகள் குழு ஆய்வு செய்ய வந்த போது அந்த கிரீடத்தை அவர்களால் கவனிக்க முடியாமல் போனது. சபரிமலை கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குகின்றனர். ஒரு பக்தர் செம்பு கிரீடத்தை காணிக்கையாக கொடுத்திருந்தார். அதைத்தான் உண்மையான தங்க கிரீடத்திற்கு பதிலாக டூப்ளிகேட் கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழு தவறாக கருதினர். இவ்வாறு அவர் கூறினார்.