கோவை ஈஷா யோக மையத்தில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பல்வேறு அமைப்புகள் போராட்டம் – எம்.பி., நடராஜன் பங்கேற்பு..!

கோவை: திருப்பூரை சேர்ந்த பெண் சுபஸ்ரீ கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி காணாமல் போனார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று கோவை செம்மேடு, காந்தி காலனி பகுதியில் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைத்துள்ளதாகவும், அடுத்தடுத்து ஈசா யோகா மையத்தில் நடைபெறும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் காவல்துறையால் மறைக்கப்படுகிறதோ என்கிற ஐயம் எழுவதாகவும், ஆகவே இது குறித்த விசாரணையை மேற்கொள்ள சிறப்பு கவனத்தை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.