மாண்டஸ் புயல்… செங்கல்பட்டு சாலையில் வேரோடு சாய்ந்த மரங்கள்..!

மாண்டஸ் புயலின் காரணமாக செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையைக் கடக்கும் நிகழ்வு நடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் இருந்த மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன.

மாமண்டூரில் இருந்து மேல் மருவத்தூர் வரை சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே ஆங்காங்கே விழுந்து கிடந்தது. நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மற்றும் மரம் அறுவை இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.இதனால் சுமார் ஆங்காங்கே 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.