பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ரூ.15 லட்சம் பணத்துடன் சிக்கிய நபர் – போலீசார் தீவிர விசாரணை..!

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பஸ்சில் இருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வைத்து இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அந்த கைப்பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.15 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடி டிரைவர் காலனியை சேர்ந்தவர் முகமது அப்துல்லா (வயது 52) என்பது தெரிய வந்தது. பணம் யாருடையது, பணத்தை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என விசாரணை நடத்தினர். அப்போது முகமது அப்துல்லா கூறுகையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே வெளிநாட்டு பணத்தை மாற்றி கொடுக்கும் அலுவலகம் நடத்தி வரும் பஷீர் என்பவர் ரூ. 15 லட்சம் கொடுத்தார். இந்த பணத்தை கேரள மாநிலம் திரூர் பஸ் நிலையம் சென்று பைசல் என்பவரிடம் கொடுத்து விட்டு வர சொன்னதாக தெரிவித்தார். பிடிபட்ட பணம் ஹவாலா பணமா அல்லது எதற்காக கேரளா கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் பஸ் நிலையத்தில் ரூ.15 லட்சம் பணத்துடன் ஒருவர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.