போலீஸ்காரரின் பைக்கில் இருந்து நகை, செல்போன், பணம் திருட முயன்ற கேரள வாலிபர் கைது..!

கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருபவா் அக்பா். இவா் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக தனது பைக்கில் வந்தார். பின்னர் தனது வாகனத்தை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், அக்பரின் பைக்கின் பெட்டியை உடைத்து அவர் பையில் வைத்திருந்த பணம் மற்றும் நகை, கைப்பேசி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்பர் சத்தம் போட்டார். அப்போது அந்த நபர், கோவை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்தார். அங்கு பணியில் இருந்த காவலாளி சந்திரன் என்பவர் அவரைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சானோஷ்கோபி (45) என்பதும், இவர் மீது கேரளம், பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.