கட்டிடம் கட்டிய பிறகு வரைமுறை கோருவதை ஏற்றுக்கொள்ள கூடாது-அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ெஜ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டி விட்டு பின் அதனை வரைமுறைப்படுத்த கோருவதை ஊக்குவிக்க கூடாது. அதை அனுமதித்தால் அனுமதியை மீறி கட்டுமானங்களை கட்டி விட்டு பின் அதை சரிசெய்து கொள்ளலாம் என்ற தவறான தோற்றம் ஏற்பட்டுவிடும். அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகள் விற்கப்படும் என்று கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும். கட்டிட பணி முடிப்பு சான்று வழங்கும் முன் நேரில் ஆய்வு செய்து, விதிமீறல்களை கண்டறிந்தால் கட்டிட பணி முடிப்பு சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும்

விதிமீறல் கட்டிடங்களை தடுக்காவிட்டால் நகரின் திட்ட வளர்ச்சி என்பது பகல் கனவாகி விடும். விதிமீறல்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காவிட்டால் விதிமீறல்கள் இருப்பது தெரியாமல் வங்கிக் கடன் பெற்று வீடு வாங்கியவர்களுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பது சிரமமாகிவிடும்.
இந்த வழக்கில் குடியிருப்புவாசிகளுக்கு கட்டுமான நிறுவனம் மாற்று இடம் வழங்கி, கட்டிடத்தை ஆறு வாரங்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின் இரு வாரங்களில் விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.