பிரதமர் மோடி, அமித் ஷாவிடம் தான் கூட்டணி குறித்து பேசுவோம் – இபிஎஸ் கறார் பேச்சு..!

துரை: ”லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் தான் பேசுவோம்,” என, மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியதாவது: ‘தமிழக முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி, மருமகன் சபரீசன் ஓராண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர்’ என, நிதி அமைச்சர் தியாகராஜன் பேசிய ‘ஆடியோ’ பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது உண்மையானது தான்.
30 ஆயிரம் கோடி ரூபாய் விவாகாரம் குறித்து நாங்கள் கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளோம். மத்திய அரசும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆளும் கட்சி வெளிப்படைத் தன்மையுடன் ஆராய வேண்டும். முதல்வர் எதற்கெடுத்தாலும் அறிக்கை விடுக்கிறார்.

அமைச்சர் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து ஏன் அறிக்கை கொடுக்கவில்லை?தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை என்ற சட்ட மசோதாவை, எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த தி.மு.க., தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்கு, அவர்களின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.கோடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தோம். ஆனால், அந்த பயங்கர செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு ஜாமின் கொடுத்தது, அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியது தி.மு.க., தான்.

மக்கள் இதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம். வேறு யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.