கீழே கிடந்த 6 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டுக்கள் .!!

தஞ்சை சிராஜ்புர் நகர். பத்தாவது தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர், வங்கியில் அடமானம் வைத்து இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 சவரன் தங்க நகைகளை மீட்டு பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு செல்லும் வழியில் தஞ்சை ஆற்று பாலம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் டீ அருந்தி உள்ளார்.

அப்போது அவருக்கு போன் வர பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பேசிக்கொண்டே சென்று உள்ளார். சிறிது தூரம் சென்றதும் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பார்த்த போது, நகைகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, பதற்றத்துடன் டீ கடைக்கு வந்து தேடி உள்ளார். அதே நேரத்தில், டீ குடிக்க வந்த மானம்புசாவடி. முஸ்லிம் தெருவை சேர்ந்த சையது காதர் என்பவர் டீ கடை வாசலில் கிடந்த நகை பொட்டலத்தை எடுத்து வைத்து கொண்டு யாரோடது  என கேட்டுள்ளார். அப்போது பதற்றத்துடன் வந்த பிரபாகரன் நகை என்னுடையது என கூறி வங்கி ரசீதை காட்டி உள்ளார். நகைகள் பிரபாகரன் உடையது என்பதை அறிந்த சையது காதர், பிரபாகரனை கிழக்கு காவல் நிலையம் அழைத்து சென்று நடந்த விவரத்தை கூறி காவல்துறையினர் முன்னிலையில் சையது காதர் பிரபாகரனிடம் நகைகளை ஒப்படைத்தார். ஆனந்த கண்ணீருடன் தொலைந்து போன நகைகளை பெற்று கொண்ட பிரபாகரன் சையது காதருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து கொண்டார்.