கோவை கோனியம்மன் கோவிலில் இன்று கோலாகல தேரோட்டம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு.!!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை மாலை 6 மணிக்கு பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று ( புதன்கிழமை) தேரோட்டம் நடந்தது. இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளல் பிற்பகல் 2 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.பேரூர் ஆதினம்சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம், குமரகுருபர சுவாமிகள் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். தேர் செல்லும் பாதையில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்று பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். மாறுவேட போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தேரோட்டத்தின் போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனமும், தீயணைப்பு வாகனமும் உடன் சென்றன.ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பு கவுண்டர் வீதி வழியாக மாலை 6 மணிக்கு தேர் நிலை திடலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி இன்று மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.