தமிழ்நாட்டில் கேரள லாட்டரி… வாளையாறில் மடக்கி பிடிக்கும் போலீசார்

கேரளா லாட்டரிகளை அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்களும் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள்.

ஒரு சில நேரம் பம்பர் லாட்டரிகளில் முதல் பரிசும் அடித்து விடுகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி டிக்கெட்டுகளை அதிக அளவு வாங்கி செல்லப்படுகிறது. இதனையடுத்து, வாளையாறு எல்லையில் தமிழக போலீசார் தீவிர சோதனையை தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களிடம் கேரள லாட்டரி டிக்கெட்டுகள் இருக்கிறதா? என்று தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கொண்டு செல்பவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. அந்த மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. தினமும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோக தற்போது ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் பரிசு அடித்து இருப்பதால் லாட்டரி பிரியர்கள் பலரும் கேரளாவிற்கு சென்றுவிட்டு வரும் போது டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரளாவில் லாட்டரி விற்பனை அனல் பறக்க தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்திற்கும் அதிக அளவில் கடத்தப்பட்டு கள்ளச்சந்தை விற்பனை அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் என்பதால் போலீசார் அவ்வப்போது சோதனை செய்து கள்ளச்சந்தையில் லாட்டரி விற்பவர்களை பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், லாட்டரிகளுக்கு எதிரான சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கேரள – தமிழ்நாடு எல்லையோர பகுதியான வாளையாறில் லாட்டரி கடைகள் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள லாட்டரி கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் லாட்டரி வாங்குவதை பார்க்க முடியும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் வாளையாறு வந்து கேரள லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.இதனையடுத்து, வாளையாறு எல்லையில் தமிழக போலீசார் தீவிர சோதனையை தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களிடம் கேரள லாட்டரி டிக்கெட்டுகள் இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்படுகிறது. அதேபோல, கேரளாவில் இருந்து மின்சாதன பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழக அரசு பேருந்தில் 4 பேர் லாட்டரி டிக்கெட்டுகளுடன் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கேரள எல்லையில் லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக கொண்டு வரப்படுகிறதா? என்று சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்ப்டும் என போலீசார் எச்சரித்து இருக்கிறார்கள்.லாட்டரி டிக்கெட்டுகள் கையில் இருந்தால் வாகனங்களில் இருந்து உடனடியாக இறக்கிவிடப்பட்டு அபராதமும், அதிக எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் வைத்து இருந்தால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், கேரளாவுக்கு சென்று திரும்புவர்கள் லாட்டரியோடு வந்தால் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிட வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆரியங்காவு, களியாக்கவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.