பவானிசாகர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி கலய அபிஷேகம்..!

பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் பால்குடம், கஞ்சிக்கலயத்தை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். வேப்பிலையுடன் அக்னி சட்டி ஏந்தியும் பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய சாலைகளின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பின் சுமந்து வந்த கஞ்சிகலயத்தை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.