“கமர் அலி தர்வேஷ்”என்று சொன்னால் போதும் காற்றில் மிதக்கும் 90 கிலோ கல்… எங்கே கேட்கிறீங்களா..?

ம் ஊரில் முன்பெல்லாம் திருமணம் செய்ய இளவட்டக் கல்லை தூக்க வேண்டும் என்பது தகுதியாக இருந்தது. கிலோக் கணக்கில் இருக்கும் கல்லை தோள்மீது தூக்கி பின்புறம் போடவேண்டும் என்பது விதி. அதனை தூக்குவதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஆனால், ஒரு கல்லை தொட்டால் போதும் 90 கிலோ கல் தானாக மிதக்கும் என்று கூறுகிறார்கள்.

மும்பைக்கு கிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் மகாராஷ்டிராவில் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய இடம் ஷிவாபூர். இங்குள்ள ஒரு சூஃபி துறவியின் கல்லறையில் அருகே தான் இந்த கல் இருக்கிறதாம். இந்த கல்லை 11 பேர் ஆள்காட்டி விரலால் தொட்டு “கமர் அலி தர்வேஷ்” என்று கத்தினால், கல் காற்றில் பறக்கிறது என்று சொல்கின்றனர்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சூஃபி துறவியான கமர் அலி தர்வேஷ், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். அந்த குடும்பத்து ஆண்கள் தங்கள் உடல் வலிமையைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்களின் பெரும்பாலான நேரத்தை உடற்பயிற்சி கூடத்தில் செலவழித்தனர்.

ஆனால், கமர் அலி தனது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களிடமிருந்து வேறுபட்டவர். அவர் தனது 6-வது வயதில் தனது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு சூஃபி ஆசிரியரிடம் சீடரானார். அதனால் அவரது பெரும்பாலான நேரத்தை தியானத்திலும் நோன்பிலும் செலவிட்டார். தனது ஆன்ம பலத்தால் நோயாளிகளை விரைவாக குணப்படுத்தியதாகவும் கதைகள் உண்டு. இரக்கம் கொண்டவராக இருந்துள்ளார். உடல் வலிமை பற்றி பெரிதும் கவனம்கொள்ளவில்லை.

அந்த காரணத்திற்காகவே மற்றவர்கள் இவரை கேலி செய்து வந்துள்ளனர். சூஃபி துறவி, மரணப் படுக்கையில் கிடந்தபோது, ​​ மிருகத்தனமான வலிமையை விட ஆன்மீக சக்தி பெரியது என்பதை நிரூபிக்க உள்ளூர் ஆண்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்திய கனமான கற்களில் ஒன்றை பயன்படுத்தினார் என்று புராணக்கதை கூறுகிறது. அவர் கல்லை தனது கல்லறைக்கு அருகில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்:

“பதினொரு ஆண்கள் தங்கள் வலது ஆள்காட்டி விரலைக் கல்லின் அடியில் வைத்துவிட்டு, கூட்டாக என் பெயரைச் சொன்னால், அது அவர்களின் தலையைவிட உயரச் செல்லும். இல்லையெனில், அவர்கள் தனியாகவோ கூட்டாகவோ சேர்ந்தால் கூட தரையில் இருந்து இரண்டு அடிக்கு மேல் அதை நகர்த்த முடியாது.” என்று சபித்துள்ளார்.

இந்த சாபத்தால் தான் 90 கிலோ கல் தானாக மிதக்கிறது என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த கல் தானாக எழுவதில்லை, 11 பேர் சேர்ந்து தூக்குவதால் தான் மேலே வருகிறது என்கின்றனர். பூனே பக்கம் நீங்கள் சென்றால் இந்த கல் தானாக மிதக்கிறதா அல்லது தூக்கப்படுகிறதா என்று செக் பண்ணி சொல்லுங்க மக்களே!