நெல்லிக்காய் மூட்டையை போல இண்டியா கூட்டணி சிதறுகிறது – ஜெயக்குமார் விமர்சனம்..!

சென்னை: வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, பா.பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள், அவற்றின் எதிர்பார்ப்புகள், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ள கட்சிகளை அதிமுகவுக்கு இழுப்பதற்கான வியூகங்கள், 2019 மக்களவை தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, தமாகா, தேமுதிக போன்ற கட்சிகளின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதேபோல, கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, செல்லூர் ராஜு, ப.தனபால், ஆர்.காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பிரச்சார குழுவும், அமைப்பு செயலாளர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய விளம்பர குழுவும் நேற்று தனித்தனியே ஆலோசனை நடத்தின.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: மக்களவை தேர்தல் தொடர்பாக 3 தேர்தல் குழுக்கள் ஆலோசனை நடத்தியுள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களின் கருத்தை கேட்க உள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழகத்தில், திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள் அல்ல. காங்கிரஸை கம்யூனிஸ்ட் ஏற்காது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், தமிழகத்திலும் அதுபோல நடக்கும்.

பாஜகவுடன் எங்களுக்கு எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சரி, இதுதான் பதில். அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது குறித்து தேர்தல் நெருக்கத்தில் தெரியவரும்.

மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழக நலனை புறக்கணித்தது குறித்தும், 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து, தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்ட திமுக குறித்தும் தேர்தலில் மக்கள் மத்தியில் தெரிவிப்போம். மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது, ஆளுநர் பதவி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக, அனைத்து மாநிலங்களிலும் அந்த பதவியை நீக்க இப்போது குரல் கொடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.