இந்தியா – சீனா மோதல்: விமானப் படைகளைத் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.!

மீபத்தில் தவாங் எல்லைப் பகுதியில் நடந்தேறிய இந்திய ராணுவம் – சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, நாட்டின் மேற்கு விமானப் படைகளைத் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 சிலிகுரியிலுள்ள பக்தோக்ரா விமானப் படைத்தளத்தை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா – சீனா எல்லையில் மேலும் சில சிறப்பு கண்காணிப்புகளும் நடத்தத் தொடங்கியுள்ளனர். சீனாவின் தரப்பில் டிரோன் போன்ற ஏதேனும் புதிய தொழில்நுட்பங்களை எல்லையில் பயன்படுத்துகிறார்களா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஹாசிமாரா விமானப் படைத்தளத்திலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து ஃபைட்டர் ஜெட்களும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கு வட வங்காளத்தில் இரண்டு விமானப் படைத்தளங்கள் உள்ளன.

அதில் ஒன்று பக்தோக்ராவிலும் மற்றொன்று ஹாசிமாராவிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விமானப் படைத்தளங்களும் இந்தியா – சீனா எல்லையிலிருந்து குறைந்த தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா – சீனா பாதுகாப்பை பேண ஒன்றிய அரசும் செவோக் – ராங்போ இடையேயான ரயில் பாதை திட்டத்தை தற்போது நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து மேஜர் அஞ்சன் குமார் பசுமதரி கூறுகையில், ” எங்களுக்கு அளிக்கப்படும் உத்தரவுகள் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நிலையில் நாங்கள் தீவிர கவனத்துடன் உள்ளோம். ஏற்கெனவே இந்தியா – சீனா எல்லையில் பலத்த பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனாவுடன் எல்லையை பங்குகொள்ளும் பகுதிகளில் ராணுவப் படைத் தயார் நிலையில் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் 354 கி.மீ. சீனாவுடன் எல்லையைப் பங்குகொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.