குன்னூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை… 303 மி.மீ பதிவு: பல இடங்களில் மண்சரிவு- வேரோடு சாய்ந்த மரங்கள்..!

குன்னூர்: குன்னூரில் விடிய விடிய கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மரங்கள் விழுந்தும், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், அருவங்காடு, வண்டிச்சோலை போன்ற பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவில் குன்னூரில்தான் அதிகபட்சமாக 303 மி.மீ பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குன்னூர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அம்பிகாபுரம், லூர்துபுரம், டிடிகே சாலையில் 7 வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அவைகளை பொதுமக்கள் போராடி மீட்டனர். ஆரோக்கியபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கேரட், பீட்ரூட் முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேட்டுப்பாளையம் சாலையில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக சரி செய்யப்பட்டது.

குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. பாரத் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமாகின. மொத்தமாக குன்னூரில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. 142 அடியை நெருங்கு கிறது பெரியாறு: பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 541 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,166 கனஅடியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்டம் 141.30 அடியாக உள்ளது. தற்போது அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 511 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் இருப்பு நீர் 7,468 மில்லியன் கனஅடியாக உள்ளது. இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு, 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மூல வைகையில் வெள்ளப்பெருக்கு: தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக வருசநாடு அருகே உள்ள மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல் சின்னச்சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்குகிறது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 104.70 அடியாகவும், நீர் இருப்பு 32.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. பவானி ஆற்றில் இருந்து 6,500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.