ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கில் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத் அலி , இடைத்தரகர்ளாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் அட்டையைத் திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, தமிழக அரசு சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அடிப்படையில், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே கருமுட்டை விவகாரத்தில் நான்கு பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு எஸ்பி சசிமோகன் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார். தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.