குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு- 97க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை – இதுவரை 15 பேர் கைது..!

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 97க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கிராமபுறங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் பாவ்நகர், பொடாட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அனைவரும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்திருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 42 பேர் இறந்தனர். இதில் பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேரும் அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும் அடங்குவர். மேலும் கள்ளச்சாராயம் குடித்து 97க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

இறந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் மெத்தனால் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவம் குறித்து பேசிய குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி,’பொடாட் மற்றும் அகமதாபாத்தில் 10 வெவ்வேறு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக 38 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.