அண்ணாமலை ஸ்டைலில்… போலீஸ் வேலையை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்த திருமாவளவன்..!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாணியில் போலீஸ் பணியை துறந்து தமிழ்நாடு பாஜகவில் இனுனொருவர் இணைந்துள்ளார்.

அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்ற விபரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு அவர் பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் சில காலம் விவசாயத்தில் ஆர்வம் செலுத்திய அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலை பாணியில் போலீஸ் துறையில் பணியாற்றிய ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதில் கவனம் ஈர்த்தவர் தான் திருமாவளவன். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் காவல் துறையில் பணியாற்றி வந்த நிலையில் அந்த பணியை துறந்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து கட்சியில் இணைத்து கொண்டார்.

இதையடுத்து அண்ணாமலை பேசுகையில், ”காவல் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக பாஜகவில் திருமாவளவன் இணைந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இது பெரிய துவக்கம்” என்றார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து கொண்ட திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

கடலூர் மாவட்டம் வடக்குதிட்டை கிராமத்தை சேர்ந்தவன் நான். காவல் துறையில் 15 ஆண்டுகளால் பணியாற்றி வந்தேன். ஹெட்கான்ஸ்டபிளாக இருந்தேன். சிறுவயதில் அரசியல் ஆர்வம் இருந்தது. சமூக சேவையில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியை பார்த்து அரசியலில் ஆர்வம் அதிகரித்தது. அண்ணாமலையின் என்னை கவர்ந்தது. மேலும் பாஜகவின் செயல்பாடு, கொள்கை, அண்ணாமலையின் செயல்பாடு எனக்கு பிடித்தது. இதனால் பாஜகவில் வந்து இணைந்துள்ளேன்” என்றார்.

இந்த வேளையில், ”காவல் துறை என்றால் நிலையான வருமானம் தரக்கூடிய பணி. அதனை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட விரும்புவது ஏன்?” என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”நமது கொள்கை, லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் இடர்பாடுகளை தாண்டி தான் வர வேண்டும். இதில் பணம், குடும்பத்தை பார்க்க முடியாது. எனது லட்சியத்தை அடைய வேண்டும். சமூக சேவை செய்ய வேண்டும் என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.