என்னது!! இலங்கையின் சுற்றுலாதுறை தூதராகிறார் நடிகர் ரஜினிகாந்த்..?

சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கு வருகை தர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; மேலும் ரஜினிகாந்த் வருகையின் மூலம் இலங்கையின் சினிமா, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் எனவும் இச்சந்திப்பின் போது டி.வெங்கடேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையில் உள்ள ராமாயண பாதை, பவுத்த தலங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இலங்கையின் சுற்றுலா தூதராக நடிகர் ரஜினிகாந்த் செயல்பட வேண்டும் என்பது அந்நாட்டின் விருப்பம். இந்த கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் பல லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ் தேசிய அமைப்பினர் இப்போதே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.