நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியிலிருந்து கேரளாவிற்கு ஊர்வலமாக சென்ற சுவாமி விக்கிரகங்கள்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் நேற்று ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றன. வரும் 26-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்தில் பத்து நாள்கள் பூஜைக்காக வைக்கப்படும்.

இதற்காக சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் சிலை நேற்று சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்தது. இன்று காலை குமாரகோயில் முருகன் விக்கிரகமும் பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையில் கேரளா பாரம்பர்ய முறைப்படி மன்னரின் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கேரளா தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலுள்ள தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆலயத்திலிருந்து சரஸ்வதி அம்மன் விக்கிரகத்தை யானை மீது அமர்த்தி கேரளா நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. வேளிமலை குமாரசுவாமி மற்றும் முன்னுதித்தநங்கையம்மன் சிலைகள் பல்லக்கில் பவனியாக உடன் சென்றன. சுவாமி விக்கிரகங்களுக்குக் கேரள மற்றும் தமிழகப் போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த சுவாமி விக்கிரகங்கள் இன்று (செப்.24) கேரளா எல்லையான களியக்காவிளையில் வைத்து கேரள அரசிடம் ஒப்படைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அப்போது பத்மநாபபுரம் அரண்மனை தலைமையகமாக இருந்தது. அரண்மனையை ஒட்டி உள்ள தேவரக்கோட்டு சரஸ்வதி தேவி, குமாரகோயில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சுவாமிகளுக்கு பத்மநாபபுரத்தில் வைத்து நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பிறகு சுவாமி சிலைகள் நவராத்திரி விழாவுக்காகப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டன.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதன் பின்னரும் பாரம்பர்யமான நவராத்தி விழாவுக்காகக் குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்குக் கொண்டு செல்லும் நிகழ்வு திருவிழா போன்று நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலக் காவல்துறையினரும் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

நவராத்திரி பூஜைக்காக எடுத்துச்செல்லப்படும் சரஸ்வதி தேவி சிலை கம்பர் வழிபட்டது என்றும், அவர் திருவிதாங்கூர் மன்னரிடம் அதை ஒப்படைத்ததாகவும் கூறுகின்றனர். சரஸ்வதி தேவியின் மூலவர் சிலையும், வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை சுவாமிகளின் உற்சவர் விக்கிரகங்களும் திருவனந்தபுரத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. திருவனந்தபுரம்வரை சுவாமி சிலைகளைப் பல்லக்கில் சுமந்தபடி நடந்தே செல்கின்றனர். திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள கரமன ஆற்றின் கரையில் கேரளாவில் உள்ள வெள்ளிக்குதிரையில் குமாரசுவாமியை வீதி உலாவாக எடுத்துச் செல்கின்றனர். கேரளாவில் வெள்ளி குதிரையில் செல்லும் முருகருக்கு வரவேற்பு அமர்க்களமாக இருக்கும்.

பாரம்பர்ய உடைவாள் மாற்றும் நிகழ்வுபத்மநாபபுரம் அரண்மனை தொடங்கி திருவனந்தபுரம் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் ‘திருக்கஞ்சார்த்து’ என்ற பெயரில் பூஜைப் பொருள்களை வைத்து சுவாமியை வழிபடுவார்கள். திருவனந்தபுரத்தில் பத்து நாள்கள் பூஜை நிறைவடைந்தபிறகு மீண்டும் பல்லக்கில் சுவாமி விக்கிரகங்கள் ஊர் திரும்பி வரும்.