சிங்காநல்லூர் கோவில் எதிரே டாஸ்மாக் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு-இந்து அமைப்புகள் கண்டனம்..!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் பின்புறம் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையுடன் சேர்ந்து டாஸ்மாக் பாரும் உள்ளது. அதே சாலையில் அதற்கு முன்னதாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென்று கோவிலுக்கு எதிரே புதியதாக டாஸ்மாக் பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து அமைப்புகள் ஒன்று கூடி கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி சிங்கை ரவி, இந்து மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ராஜன், சிவ ருத்ர சேனா தேசிய தலைவர் ஓம் பரமானந்த பாபாஜி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்று காலை திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்து அமைப்புகள் கூறுகையில், அதி விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவில் எதிரே டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது. பக்தகோடிகள் நிம்மதியாக கோவிலுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே நேற்றைக்கு இப்பகுதி பெண்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் . அடுத்த கட்ட நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்திலும் டாஸ்மாக் ஆணையத்தில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் கோவில் எதிரே டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் எங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பயமில்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல முடியாத அவலநிலை உள்ளது . எனவே இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.