மும்பையில் பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
நம் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மும்பை நகரில் வசித்து வந்த கணவன் மனைவி மற்றும் அவர்தம் வளர் இளம் பருவத்து மகள்கள் என நால்வரும் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் சுற்றத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக. மரணத்திற்கான காரணமாகக் கருதப்படுவது அவர்கள் நால்வரும் இறுதியாகச் சாப்பிட்ட தர்பூசணிப் பழமாகும். நிகழ்வு நடந்த அன்று அவரது சகோதரர் குடும்பத்துடன் இணைந்து இறந்த நால்வரும் சிக்கன் பிரியாணி மற்றும் புலாவ் சமைத்து இரவு 10.30 மணி போல் சாப்பிட்டிருக்கின்றனர்.அதன் பிறகு சகோதரர் குடும்பம் அவரது வீட்டிற்குச் சென்று விட.இவர்கள் நால்வரும் வெயில் புழுக்கம் காரணமாக குளிர்ச்சியாக சாப்பிட எண்ணி தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டிருக்கிறார்கள்.அதை சாப்பிட்ட பிறகு உறங்கச் சென்றவர்களுக்கு அதிகாலை தொட்டே ஒவ்வொருவராக வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தலை சுற்றல் என ஆரம்பித்துள்ளது.காலை வாக்கில் அவர்தம் குடும்ப மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்துப் பார்த்த போதே மகள்களுள் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளார். மற்ற மூவரும் சுயநினைவு மங்கிய நிலையில் இருந்துள்ளனர்.மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட பிறகு அடுத்தடுத்து பனிரெண்டு மணிநேரத்திற்குள் நால்வரும் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் சிக்கன் பிரியாணியுடன் வாட்டர் மெலான் சாப்பிட்ட குடும்பம் மரணம் என்று தலைப்புகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன.இங்கே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அவரது சகோதரர் குடும்பத்தில் அனைவரும் நன்றாக உள்ளனர். எனவே சிக்கன் பிரியாணி பிரச்சனையில்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது. சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகு வாட்டர் மெலான் சாப்பிடுவது தவறா? என்ற ரீதியில் கேள்விகளும் சந்தேகங்களும் வருகின்றன.
சிக்கன் பிரியாணிக்கும் வாட்டர் மெலானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாரளமாக இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றோ அல்லது ஒன்றாகவோ சாப்பிடலாம். அதனால் எந்த பிரச்சனையும் வராது. வருவதில்லை. மேலும் வாட்டர் மெலானிலும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இந்த நால்வருக்கும் எவ்வாறு மரணம் சம்பவித்திருக்கும். இதை காவல் சட்டத்துறை வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிவிப்பர்.
கூடவே பிரேதப் பரிசோதனை முடிவுகளும் நமக்கு நிகழ்வின் உண்மையை வெளிக்கூறும். எனினும் எவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம். எவை காரணங்களாக இருக்க இயலாது என்பதை நம்மால் சிந்திக்க முடிகிறது.
நள்ளிரவு ஒரு மணிக்கு நால்வரும் இத்தகைய பழத்தை ஒன்றாக சாப்பிட்டிருப்பது சந்தேகத்திற்குரிய வகையில் எடுத்துக் கொண்டால். இது த*ற்*கொலை முயற்சியாக இருக்கலாம். காரணம் அத்தகைய நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன் சேர்ந்து நால்வரும் பழத்தை உண்ண வேண்டிய காரணம் என்பது சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது. இது யூகம் தான்.
சனிக்கிழமை இரவு என்பதால் குடும்பத்துடன் கண் விழித்திருந்திருக்கலாம். புழுக்கம் காரணமாக வாட்டர் மெலான் சாப்பிட்டிருக்கலாம். அந்த வாட்டர் மெலானில் ஏற்கனவே இவர்களைக் கொன்று தீர்க்கும் நோக்கத்தோடு விஷம் கலக்கப்பட்டிருக்கலாம்.
வாட்டர் மெலானை காற்று புகாத வண்ணம் டப்பாவில் அடைத்து பல நாள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால்
அரிதாக அதில் க்ளாஸ்ட்ரீடியம் பாடுலினம் எனும் கொடூரமான பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் தொற்று கண்ட உணவு பொருளில் வாசத்திலோ உணவின் தன்மையிலோ பெரிய மாற்றம் இருக்காது.
சுவையிலும் மாற்றம் இருக்காது. இந்தத் தொற்று கண்ட உணவை உண்ணும் போது நரம்பு மண்டலம் செயலிழக்கும். மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் பிரியும். ஈ.கோலை, சால்மோனெல்லா போன்ற தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் பழம் வாடை அடித்திருக்கும். அதீத புளிப்பு சுவையுடன் இருந்திருக்கும். சாப்பிட்டிருக்க வாய்ப்பு குறைவு.
பழம் பழுக்க வைக்க அளவுக்கு அதிகமான கால்சியம் கார்பைடு உபயோகிக்கும் போது அதில் இருந்து அசிடிலைன் எனும் வாயு வெளியேறும். அதனுடன் அர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நச்சுப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கலாம். கூடவே பழம் நன்றாக சிவப்பாக இருக்கவும் எரித்ரோசின் எனும் சாயம் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.
தர்பூசணியில் இருந்த நைட்ரேட்டுகள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் சேர்ந்து மெத்ஹீமோகுளோபினீமியா எனும் நிலையை உருவாக்கி அதனால் மரணம் சம்பவித்திருக்கலாம். இவ்வளவு அளவுக்கு அதிகமான நச்சுப் பொருள் ஒரு பழத்தில் சேர்ந்திருப்பது என்பதும் அரிதான ஒன்று.
தர்பூசணிப் பழங்கள் வாங்கும் போதும் உண்ணும் போதும்
அதீத சிவப்பு நிறத்தில் அதன் இயற்கைக்கு மாறாக இருந்தாலோ
வெளியே நன்றாக பழுத்தது போல இருந்து வெட்டும் போது உள்ளே பழுக்காத நிலையில் இருந்தாலோ நாம் கவனத்துடன் அந்தப் பழங்களை நோக்க வேண்டும்.
மற்றபடி தர்பூசணி பழங்களைக் கண்டாலே நாம் அச்சப்பட வேண்டியதில்லை. பிரியாணி + தர்பூசணி இந்த காம்பினேசனிலும் இந்த ஆபத்தும் இல்லை. இயன்றவரை பழங்களை வாங்கி உடனுக்குடன் சாப்பிட்டு விடுவது சாலச் சிறந்தது.
ஒருவேளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும் என்றாலும் முறையாக பாதுகாப்பாக அதை பராமரிக்க வேண்டும். அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் இடங்களில் இன்னும் கவனம் தேவை. உண்ணப்போகும் உணவில் கிருமித் தொற்று இருக்கலாம் என சிறிய அளவு சந்தேகம் தோன்றினாலும் அந்தப் பொருளை உண்ணாமல் இருப்பது சிறந்தது.
உணவின் நார்மலான வாசம் இல்லாமல் நாற்றம் எடுப்பது, கெட்ட வாடை வீசத் துவங்குவது, சுவையில் அதீத புளிப்புத் தன்மை/ சுவையில் மாற்றம், உணவு இருக்க வேண்டிய பதத்தில் இல்லாமல் நொலு நொலுவென்று ஜெல்லி போன்று மாறுவது ஆகியன அபாயகரமான கிருமித்தொற்று இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்.
ஃப்ரிட்ஜில் இருந்து உணவை எடுத்து உண்ணும் போது ஒவ்வொரு முறையும் நன்றாக சுட வைத்து உண்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.ஒருவேளை உணவை சாப்பிட்டு வாந்தி , குமட்டல் , வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அசட்டையாக இருந்திடாமல் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
பல நேரங்களில் சிகிச்சை பெறக் காட்டும் தாமதமே இது போன்ற தொற்றுகளில் உயிரைக் கொல்லப் போதுமானதாக இருக்கிறது. உண்ணும் உணவைப் பார்த்து அதை நுகர்ந்து பிறகு ருசித்து உண்ண வேண்டும்.
உண்ணும் போது இயன்ற அளவு செல்போன் பார்க்காமல் உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். அப்போது தான் உணவின் தன்மையை நம்மால் சரியாக உணர முடியும். இன்னும் விசாரணை நடந்து இவர்கள் நால்வரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் போது மீண்டும் அப்டேட் செய்கிறேன். ” இவ்வாறு அந்த பதிவில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.







