வணக்கமுங்க.. அண்ணாமலை பேசுறேன்.. தமிழகத்தை மீட்டெடுக்க வாங்க… அழைப்பு விடுத்த பாஜக .!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாஜக திட்டம்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியைத் தொடர பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எப்படியாவது கணிசமான இடங்களைப் பிடித்து விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது பாஜக. அந்தவகையில், ‘என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் ஊழலுக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கவுள்ளார் அண்ணாமலை. ஜூலை 28ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபயணத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நடைபயணத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது பாஜக.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மீது மட்டுமல்ல ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. எதிர்க்கட்சிகள் வைத்த போலி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்றமே கண்டனமே தெரிவித்தது.

ஆனால், திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஒரு அமைச்சர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பல அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர். மக்கள் பணத்தை முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகன் கொள்ளை அடித்தது குறித்து மாநில நிதி அமைச்சரே கூறியுள்ளார்.

தினம் ஒரு ஊழல் வெளிப்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வு என்ன? ஊழல் திமுகவின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வாருங்கள், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். அனைவரும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 3157 225 க்கு அழைத்து உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது குரலில் “வணக்கமுங்க.. அண்ணாமலை பேசுறேன்.. நல்லாருக்கீங்களா? என் மண் என் மக்கள் பயணத்தில் நீங்கள் இணைந்தது மகிழ்ச்சி.. வாருங்கள் சேர்ந்து பயணம் செய்வோம்” எனச் சொல்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.