“இனி இதற்கெல்லாம்” ஜிஎஸ்டி வரி கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!!

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன.

நேற்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.. இந்த கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டபோதே, 2 விதமான எதிர்பார்ப்புகள் எழுந்தன.

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுமா? மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்புகள் வட்டமடிக்க துவங்கின.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடந்து முடிந்தது.. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் போன்றவற்றில் பந்தயம் கட்டும் போது நடக்கும் மொத்தத் தொகைக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரை பந்தயம் சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்ற நடவடிக்கைகளுக்கு தகுதியற்றதாக கருதப்படுவதை உறுதிசெய்ய ஜிஎஸ்டி சட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டினுடக்சிமாப் மருந்து மற்றும் அரிதான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ உணவுப் பொருள் (எஃப்எஸ்எம்பி) இறக்குமதிக்கு ஜிஎஸ்டியில் இருந்து நிவாரணம் வழங்கவும் கவுன்சில் முடிவு செய்துள்ளது..

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். செயற்கை ஜரிகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படும். தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மகாராஷ்டிராவின் வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் சொல்லும்போது, “ஆன்லைன் கேமிங்கில் திறமையான விளையாட்டுகள் + அதிர்ஷ்டமான விளையாட்டுகள் என வேறுபடுத்தும் கருத்தை ஜிஎஸ்டி கவுன்சில் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் பந்தயம் கட்டும் மொத்த தொகைக்கு மட்டும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக முடிவு எடுத்துள்ளதற்கு, ஒட்டுமொத்த சினிமா துறையும் வரவேற்பு தெரிவித்து வருகிறது.