கனமழை எச்சரிக்கை: கூடலூர்-மலப்புரம் மலைப் பாதையில் இரவு போக்குவரத்துக்கு தடை- தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் ஊட்டி வருகை..!

தமிழகத்தில் நீலகிரி உள்பட சில மாவட்டங்களில்(ஆரஞ்சு அலர்ட்) ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால், கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் ஊட்டிக்கு வந்துள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மிதக்கும் படகுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இதை தொடர்ந்து பாதிப்பு அதிகமாக ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். சஞ்சீவ் ஜெய்வால் தலைமையில் 22 பேர் அடங்கிய ஒரு குழுவினர் கூடலூருக்கும், பிரதீப்குமார் தலைமையில் 22 பேர் குந்தா பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊட்டியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே கேரளாவில் மலப்புரம், வயநாடு உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என(ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களின் கரையோரம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளன. மேலும் இந்த வழியாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தனியார் வாகனங்களும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும், கூடலூர், மலப்புரம் இடையே மலைப்பாதையில் 2 நாட்கள் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. தொடர்ந்து கேரள வழிகடவு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.