குடோன் வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை- ஜாமினில் வந்த கொலை வழக்கு கைதிகள் 2 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு ..!!

கோவை:
கோவை நகரில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் கஞ்சா சப்ளை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இதை கண்டுபிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளம் பெரியார் நகர், முத்தாலப்பன் (வயது 33), செல்வபுரம் கல்லா மேடு. ராஜா ( வயது 41)ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் உள்ள குடோனில் ஒரு அறையில் சோதனை நடத்தி 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முத்தாலப்பன் மீது ஆந்திராவில் கொலை வழக்கு உள்ளது. ராஜாவுக்கு கோவையில் கொலை வழக்கு உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேருக்கும் அங்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ஜாமினில் வெளியே வந்த பிறகும் அவர்கள் நட்பு நீடித்தது.பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கிலோ 8 ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சாவை விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். இவரிடம் கஞ்சா வாங்கியவர்கள் அதனை பொட்டலமாக போட்டு கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் 300 கிலோ கஞ்சா விற்றது தெரியவந்தது. இந்த கஞ்சா கடத்தல் கும்பலுக்கு குண்டூர் ராஜன் என்பவர் தலைவராக செயல்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ளார் .குண்டு ராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.