ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி தேடி வந்து தோளில் கைபோட்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

ந்தோனேசியாவில் நடந்துவரும் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை  பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த நட்சத்திரஹோட்டலில் உலகத் தலைவர்கள் இன்று முதல் கூடி பல்வேறு அம்சங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் உலக நாடுகள் பல எரிபொருள், உணவுப் பிரச்சினையை, சுற்றுச்சுழல், பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இவை குறித்து உலகத் தலைவர்கள் இரு நாட்கள் ஆலோசிக்க உள்ளனர்.

ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் ஆகியவை பங்கேற்றுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்தோனேசியாவில் உள்ள இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ஜி20 மாநாட்டின் முதல்நாளான இன்று நடக்கும் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பில் இரு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி கைகலுக்கும் படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் “பாலியில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டகாட்சி” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். முன்னதாக இந்தோனேசியா வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி இந்தோனேசிய அரசு வரவேற்பு அளித்தது.