ஜி20 மாநாட்டில் அசத்திய பிரதமர் மோடி- அமெரிக்கா புகழாரம்..!

வாஷிங்டன்: சமீபத்தில் நடந்த முடிந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி- பைடன் இடையே நடந்த சந்திப்பு முக்கியமானதாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க டாப் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர்.

ஜி20 மாநாடு சமீபத்தில் தான் இந்தோனேசியாவில் நடந்து முடிந்தது. இதில் உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையே நடந்த உரையாடல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இந்த நூற்றாண்டு போருக்கானது இல்லை என்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதை அமெரிக்கா வெகுவாக பாராட்டி இருந்தது. மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடியை அமெரிக்க அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். இந்தியா-அமெரிக்க வரலாற்றில், 2022 ஒரு முக்கிய ஆண்டாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டு அது இன்னும் முக்கியமானதாக இருக்கும் என்றும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஜான் ஃபைனர் கூறினார். இந்தியா உடனான உறவைச் சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு உறவாக பைடன் நிர்வாகம் பார்ப்பதாகவும் அந்நாட்டின் முதன்மை துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் தெரிவித்தார்.

மேலும், ஜி20 மாநாட்டில், உலக நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஜான் ஃபைனர் பாராட்டினார். அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஜான் ஃபைனர் மேலும் கூறுகையில், “சர்வதேச அளவில் இருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்யக் கூடிய நல்ல கூட்டாளிகளை உலகெங்கும் அமெரிக்கா தேடி வருகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் பிரதமர் மோடியும் டாப் இடத்தில் உள்ளனர். ஜி-20 மாநாட்டில் கூட உலக நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

அணுசக்தி பிரச்சனை தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த செயல் உண்மையில் முக்கியமானது. 2022ஆம் ஆண்டு இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் ரொம்பவே முக்கியமானது. 2023 இன்னும் கூட முக்கியமானதாகவே இருக்கும். அடுத்து குவாட் உச்சி மாநாடும் நடைபெற உள்ளது. இப்போது இந்தியா தான் ஜி 20 மாநாட்டிலும் தலைமை பொறுப்பில் உள்ளது. இந்தியாவின் தலைமையை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இந்தியா உடன் அமெரிக்காவுக்கு இருக்கும் உறவை பைடன் நிர்வாகம் முக்கியமானதாகப் பார்க்கிறது. இது வெறும் தொடக்கம் தான்.

வரும் நாட்களில் இரு தரப்பும் இணைந்து மேலும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. உலகின் இரு பெரும் ஜனநாயக சக்திகளுக்கு இடையே இருக்கும் இந்த உறவு இரு தரப்பிற்கும் பெரியளவில் பயன் தரும்” என்றார். அதேபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அதிபர் பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன், “அதிபர் பைடன் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலியுறுத்துகிறார். இந்தியத் தூதரகத்தின் இந்த வளர்ச்சி அதைக் காட்டுவதாகவே உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் உறவு கடந்த காலங்களிலும் முக்கியமானதாகவே இருந்து உள்ளது. அதைத் தாண்டி வரும் காலத்தில் இன்னுமே முக்கியமானதாக இருக்கும்” என்றார்,

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. மேலும், உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்த போதிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் பொருட்களை வாங்கி வருகிறது. மேலும், கடந்த காலங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக இருந்த போது, பல நேரங்களில் ரஷ்யா தான் நமக்கு ஆதரவாக இருந்து உள்ளது. இதை சமீபத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.

இன்னும் கூட ரஷ்யாவிடம் இருந்து நாம் ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறோம். இதன் காரணமாகவே அமெரிக்கா இந்தியா உடன் நெருக்கம் காட்ட முயன்று வருகிறது. பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் இதுவரை 15 முறை சந்தித்து ஆலோசித்து உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கூட இந்தியப் பிரதமர் மோடியை அதிபர் பைடன் தேடி வந்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.