குந்தா அணையில் இருந்து 2 மாதங்களில் 8 முறை தண்ணீர் திறப்பு..!

ஊட்டி: குந்தா அணை துார்வாரப்படாததால் இரு மாதங்களில் 8 முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89
அடியை கொண்டது .இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி,
பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி
செய்ய முடியும். முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர்
வரும் நீர் பிடிப்பு பகுதிகளில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பல
ஏக்கரில் உள்ளது.பருவ மழை காலங்களில் நீரோடைகளில் அடித்து வரும் சேறும்,
சகதியும் அணையில் சேகரமாகிறது. பல ஆண்டுகளாக முழுமையாக துார்வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழைக்கு அணை முழு கொள்ளளவை எட்டி விடும். தற்போது,தென் மேற்கு பருவமழை இயல்பைவிட, 50 சதவீதம் கூடுதலாக பெய்து வருகிறது
கடந்த ஒரு மாதமாக அணைக்கு வினாடிக்கு சராசரியாக 150 முதல், 200 கன அடி
நீர் வரத்து உள்ளது. கடந்த ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையால், குந்தா
அணைக்கு வினாடிக்கு சராசரியாக 200 கன அடி தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது. தண்ணீர் தேக்கி வைக்க முடியாத காரணத்தினால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, இரு மதகுகளில், தலா 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 8 முறை அணை நிரம்பி திறக்கப்பட்டு உள்ளது.