40,000-லிருந்து 3,000 ஆக … புலிகளை காக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டம் – பிரதமர் மோடி அறிவிப்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் ‘புலிகள் திட்டத்தின்’ பொன்விழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள புலிகள் குறித்த எண்ணிக்கை கணக்கெடுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

அதேபோல புலிகள் மட்டுமல்லாது மற்ற பெரிய பூனை இனங்களான ‘புலி-சிங்கம்’ இனத்தையும் காக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு காடுகளிலும் இயற்கையாகவே உணவு சங்கிலி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் விலங்குதான் புலிகள். புலிகள் என்றால் வெறும் புலி மட்டுமல்ல அதன் மற்றொரு இனமான சீட்டா, சிறுத்தை , ஜாகுவர், பனிச்சிறுத்தை ஆகியவை இருக்கின்றன. இது தவிர சிங்கங்கள், மலை சிங்கங்கள் என மொத்தம் 7 வகையான மிகப்பெரிய பூனை வகைகள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இவற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து சரிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்த அளவில் புலி தேசிய விலங்காக இருக்கிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பூனை இனமாக புலி இருக்கிறது. ஆனால் இந்த புலி கடந்து வந்த பாதையானது மிகவும் கொடூரமானதாகும். ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி தற்போது வரை புலிகள் வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆங்கிலேயேர்கள் தங்களின் வீரத்தை பறைசாற்றுவதற்காக இதுபோன்ற வேட்டைகளில் ஈடுபட தொடங்கினர். தற்போது அதன் தோலுக்காகவும், பல்லுக்காகவும் வேட்டையாடப்படுகிறது.

இந்தியாவில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின் மற்றும் ஜாவா என மொத்தம் 8 வகை புலி இனங்கள் இருந்திருக்கிறது. ஆனால் வேட்டை காரணமாக கடந்த 1 நூற்றாண்டில் இந்த இனங்களில் பலவற்றை நாம் இழந்திருக்கிறோம். அதாவது 1940களில் பாலி, ஹாஸ்பின் புலி இனங்களும், 1970களில் ஜாவா புலி இனமும் முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆக இந்தியாவில் தற்போது வெறும் 4 புலி இனங்கள்தான் இருக்கின்றன. அதிலும் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த பெங்கால் புலிகளின் எண்ணிக்கை 40,000 ஆயிரமாக இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சொற்ப எண்ணிக்கையில்தான் இருக்கின்றன.

பிரதமர் மோடி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் தற்போது வெறும் 3,167 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. புலியை போலதான் மற்ற பெரிய பூனைகளான சீட்டா (ஆப்ரிக்கா), சிறுத்தை, ஜாகுவர்(தென் அமெரிக்கா), பனிச்சிறுத்தை(நேபாளம்), சிங்கம் மற்றும் மலை சிங்கங்கள்(வட அமெரிக்கா) ஆகியவையும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. எனவே இதனை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

‘சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி (International Big Cats Alliance – IBCA) ‘ என்பதுதான் இந்த திட்டமாகும். இதன் மூலம் மேற்குறிப்பிட்ட பெரிய பூனைகளை பாதுகாக்க குறைந்தப்பட்சம் ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்படும். தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் நிதி ஒதுக்கீடுக்கு பின்னர் மீண்டும் இந்த உயிரினங்களின் எண்ணிக்கை மறு கணக்கீடு செய்யப்படும். இந்த கூட்டணியில் 97 நாடுகள் வரை சேர்ந்திருக்கும். இன்றளவிலும் இந்த உயிரினங்கள் வேட்டையாடுவது, அழகுக்காக வளர்ப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க இந்த கூட்டணி ஒற்றுமையாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.