தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.37 லட்சம் மோசடி – 16 பேர் மீது வழக்கு..!

கோவை பீளமேடு வரதராஜபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சுனிதா ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். மேலும் பால் ஜெய்சன், கவுசல்யா, அயனா ஷெஜி ஆகியோரும் நிர்வாக பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்..நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் கணக்குகளை மண்டல மேலாளர் ஜெபசீலன் சாம்ராஜ் தணிக்கை செய்தார். அப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து போலி நகைகளை வாங்கிக் கொண்டு அதனை தங்க நகை என்று எழுதி கடன் கொடுத்து வந்ததும், இதற்கு மேலாளர் உட்பட பலர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை எடுத்துக் கொண்டு போலி நகையை வைத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ 37 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது . இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மண்டல மேலாளர் ஜெபசீலன் சாம்ராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவன மேலாளர் சுனிதா ஹரிதாஸ், பால் ஜெய்சன், கவுசல்யா, அயனா ஷெஜி மற்றும் வாடிக்கையாளர்கள் 12 பேர் என மொத்தம் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நிதி நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட மேலாளர் உட்பட 4 பேர் அந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.