தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் தீர்மானம்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜீவா அரங்கத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தூய்மைக்காவலர் சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான சுந்தரம் தலைமையி்ல் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாவட்ட சங்க நிர்வாகி சக்திவேல் வரவேற்றார். திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 66,000 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வெளி முகமை அடிப்படையில் எவ்வித பணிப்பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்புகளுமின்றி பணியாற்றுகிறார்கள். கொரோனா நோய்த்தொற்று காலத்தில்  இத்தொழிலாளர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்த சேவையை உலகமே பாராட்டியது.
ஆனால் இத்தொழிலாளர்கள்  மாதம் 3600/-ரூபாயை மட்டுமே ஊதியமாக பெற்று வந்தனர்.
ஏஐடியூசி தொழிலாளர் சங்கமும்,ஏஐடியூசி சங்கத்தின் மூத்த தலைவரும், திருப்பூர் எம்பியுமான கே.சுப்பராயன்  தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தூய்மைக்காவலர்களின் மாத ஊதியத்தை 3600/-லிருந்து 5000/-ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு சங்கம் தனது நன்றியையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயம் இத்தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டுமெனவும், அதுவரை மாதம் 21000/-ரூபாயை தொகுப்பூதியமாக வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு  சங்கம் வேண்டுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.