சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த 2 ஷவர்மா கடைகளுக்கு அபராதம்-உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை..!

சத்தியமங்கலம் : உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சவர்மா கடைகள் , அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ,உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் ஆணையின்படி சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சவர்மா கடைகளில் மேரினேட்டட் சிக்கன் எனப்படும் மசாலா தடவிய பழைய சிக்கன் 2 கிலோ குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. செயற்கை கலர் பவுடர் கலந்து தயாரித்த சில்லி சிக்கன் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் சில்லி சிக்கனுக்கு கலர் பொடிகள் பயன்படுத்தக்கூடாது எனவும், அஜினாமோட்டா பயன்படுத்தக் கூடாது எனவும், பாலிதீன் பைகள் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. தினமும் பிரஷ் ஆன சிக்கன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. செயற்கை கலர் பவுடர் பயன்படுத்தி சிக்கன் சில்லி தயாரித்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு குறைபாடுகள் சம்பந்தமான புகார்கள் தெரிவிக்க 944042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.