கேரளா உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் மகளிர் போலீஸ்: மாஜி பெண் டிஜிபி ஸ்ரீலேகா பரபரப்பு பேச்சு.!!

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பெண் போலீசார், உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள காவல்துறையில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஸ்ரீலேகா. குற்றப்பிரிவு ஐஜி, போலீஸ் பட்டாலியன் ஏடிஜிபி, சிறைதுறை டிஜிபி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். 4 வரும் சிபிஐ-யில் எஸ்பியாகவும் இருந்துள்ளார். கடந்த 2020ல் தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்தபோது ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேரள காவல்துறையில் சாதாரண கான்ஸ்டபிள் முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை பதவியில் உள்ள பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். மேல் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும், பெண் போலீசாரை கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. காவல்துறையில் ஆண் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. நான் பணியில் சேர்ந்து முதல் 10 வருடங்கள் பல கொடுமைகளை அனுபவித்துள்ளேன்.

அவற்றை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிடலாமா? என்று கூட ஆலோசித்தேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு டிஐஜி போலீஸ் கிளப்பிற்கு ஓய்வெடுக்க வந்தார். அவர் வரும்போதெல்லாம் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரை அறைக்கு அழைப்பாராம். இதை அந்த பெண் எஸ்.ஐ. என்னிடம் கூறினார். நான் அவரை சாமாதானப்படுத்தி அனுப்பினேன். பின்னர் டிஐஜியை தொடர்பு கொண்டு (பெண் எஸ்ஐ) இன்று வரமாட்டார் என்று கூறினேன். டிஐஜிக்கு நிலைமை புரிந்து கொண்டு அவர் விட்டு விட்டார்.

அரசியல் பின்புலம் உள்ள போலீஸ் அதிகாரிகள், டிஜிபி உள்பட எந்த உயரதிகாரியை வேண்டும் என்றாலும் திட்டுவார்கள். தங்களின் கீழ் பணிபுரிபவர்களாக இருந்தாலும் கூட மேல் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. பல வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அப்போதைய முதல்வர் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊழலுக்கு பேர் பெற்ற ஒரு உயர் அதிகாரியும் பங்கேற்றார். அவரை பார்த்து அப்போதைய முதல்வர், ‘இவர் ஒரு ஊழல் பேர்வழி என்று எனக்கு தெரியும்.

ஆனாலும் இவர் கீழ்ப்படியும் ஒரு அதிகாரி. என்ன வேலை கொடுத்தாலும் அதை செய்து முடிப்பார். அதனால் அவர் ஊழல் செய்வதை நான் கண்டு கொள்வதில்லை என்று கூறினார். அதை கேட்டு நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு ஸ்ரீலேகா கூறினார். ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது கேரள அரசியல் மற்றும் போலீஸ் மத்தியில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.