மீண்டும் டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி – நூற்றுக்கணக்கில் போலீஸ் குவிப்பு.!!

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது.

மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர்.

ஏன் போராட்டம்: விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று போராட்டம்: விவசாயிகள் அமைப்புகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் போராட்டம் நடத்தும் முயற்சியை புதுப்பிக்கவுள்ளன. முன்மொழியப்பட்ட போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகள் மற்றும் ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

மார்ச் 3 அன்று, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் அல்லாத) ஆகியவை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மார்ச் 6 புதன்கிழமை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தன.

இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

போராட்டம்; பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், , மின்கட்டண உயர்வு, .விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி நாடு தழுவிய நான்கு மணி நேர ரயில் மறியலுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது போக ஹரியான-பஞ்சாப் எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கலைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான மோதல் உக்கிரமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.