புதுடெல்லி: அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் சிறந்த தலைவர்கள் பலரின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவின் வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். இந்தியாவின் வரலாறு வீரர்களின் வரலாறு, மற்றும் வெற்றியின் வரலாறு, தியாகம், சுயநலமற்ற மற்றும் துணிச்சலான வரலாற்றை கொண்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத் துக்குப் பின்னும், ஆங்கிலேயர் ஆட்சி கால சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறு தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது.
சுதந்திரத்துக்குப்பின் அடிமை கொள்கை மாறியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அடிமை மனநிலையில் இருந்து வெளியேறி, நாட்டின் வளமான கலாச்சாரத்தில் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது.
ஆங்கிலேயர் ஆட்சி கால விலங்குகளை இந்தியா தற்போது உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் நமது பாரம்பரியத்தை போற்றி, நமது நாட்டுக்காக போராடிய வீரர்களை பெருமையுடன் நினைவுகூர வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், வீர புதல்வர்கள் மற்றும் புதல்விகள் அடக்கு முறையாளர்களை எதிர்த்து போரிட்டுள்ளனர். ஆனால், வரலாற்றில் வேண்டும் என்றே இவர்களை பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் செய்யப்பட்டுள்ளது. வரலாற்று பக்கங்களில் அறியப்படாத நாயகர்களை கொண்டாடுவதன் மூலம்,இந்தியா தனது கடந்த கால தவறுகளை சரி செய்கிறது.
இந்தியாவின் பயணத்தில் அசாம் மாநில வரலாறு மிகவும் பெருமை மிக்கதாகும். பலதரப்பட்ட சிந்தனைகள், நம்பிக்கைகள் மற்றும் நாட்டின் கலாச்சாரங்களை ஒன்றிணைப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடு இன்று தனது கலாச்சார பன்முகத்தன்மையை மட்டும் கொண்டாடவில்லை, கலாச்சாரத்தை காத்த வரலாற்று சிறப்பு மிக்க வீரர்களையும் பெருமையுடன் நினைவுகூர்கிறது.
நாடுதான் முதல் முக்கியம் என்ற மந்திரத்தின்படி, நாம் வாழ லச்சித் போர்புகானின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. நாடு தனது பாரம்பரியத்தை அறியும் போது, எதிர்கால பாதையை உருவாக்க முடியும்.
நாட்டின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கு, வீரர் லச்சித் போர்புகானின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. அந்நிய சக்திகளிடமிருந்து நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் வீரர்கள்தான். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.