கோவை வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு – 2 வாலிபர்கள் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியன் ரோட்டை சேர்ந்தவர் முகமது ரபி(47). இவர் டிகே மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முகமது ரபி தனது நண்பர் ஒருவருடன் அங்குள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் முகமது ரபியிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் இரும்பு ராடை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. ஆயிரத்தை பறித்து தப்பினர். இது குறித்து முகமது ரபி கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், முகமது ரபியை மிரட்டி பணம் பறித்தது ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையத்தை சேர்ந்த லாரி மெக்கானிக் முத்துக்குமார்(20), தொழிலாளி கோகுல்(22) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை போத்தனூர் சிட்கோ ஸ்ரீ சாய் நகரை சேர்ந்தவர் டாக்டர் மணிவாசகன் (57). இவரது மனைவியும் டாக்டராக உள்ளார். இவர்கள் க.க.சாவடியில் ஸ்ரீ பாலாஜி கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு கிளினிக் சென்று விட்டனர். பின்னர் இரவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை ஹெல்மெட் அணிந்த படி 2 வாலிபர்கள் உடைத்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிவாசகன் சத்தம் போட்டார். இதையடுத்து 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், திருப்பூர் குன்னத்தூரை சேர்ந்த ஸ்டுடீயோ ஊழியர் இம்ரான் (34) மற்றும் கூலி தொழிலாளி சத்தியமங்கலத்தை சேர்ந்த பரத்குமார் (35) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.