ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி… கோவையில் 39 பன்றி பண்ணைகளில் கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு..!

நீலகிரி மாவட்டம் குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறது. இதே போனறு, முதுமலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன. இறந்த காட்டுப்பன்றிகளை ஆய்வு செய்ததில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் காரணமாக பன்றிகள் உயிரிழந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பன்றிகளை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மேலும், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளது. வளர்ப்பு பன்றிகளுக்கு இதுவரை எந்தவித பாதிப்புகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரள அரசு பன்றிகளை உயிருடன் அல்லது இறைச்சியாக கொண்டு செல்ல வரும் 16-ந் தேதி வரை தடை விதித்துள்ளது. இதனால், நாகலாந்திற்கு கோவையில் இருந்து அதிகளவில் பன்றிகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, கோவை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 39 இடங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். முன் எச்சரிக்கையாக, பன்றிகளின் எச்சங்கள், கழிவு மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 39 பன்றி பண்ணைகள் உள்ளன. இதில், 3 ஆயிரத்து 687 பன்றிகள் உள்ளன. தற்போது வரை எந்த பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவாது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டால் பன்றிகள் உயிரிழக்க நேரிடும்.

தற்போது, பண்ணைகளில் ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேரிகரிக்கப்பட்டு உள்ளன. பன்றிகள் திடீர் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பண்ணையை சுத்தமாக பராமரிக்க வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டாம், ஓட்டல் கழிவு உணவுகளை பன்றிக்கு அளிக்க கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர, சென்னையில் இருந்து இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை பின்பற்றப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகளிடம் வனத்தில் காட்டுப்பன்றிகள் இறப்பு தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.