வாலிபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது..!

கோவை காரமடை மரியபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 33). டிரைவர்.

சம்பவத்தன்று இவர் காரமடை மேம்பாலத்துக்கு கீழே உள்ள ஒரு பேக்கரி அருகே
தனது மினி வேனில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேகர் என்கிற நாய் சேகர் என்பவர் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நாய் சேகரிடம் நான் எதற்கு உனக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாய் சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் நாய் சேகர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் ஜெயபிரகாஷ் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாய் சேகர்
கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாய் சேகர் மீது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள்
நிலுவையில் உள்ளது.

புதுகோட்டையை சேர்ந்தவர் அன்பு (26). இவர் கோவை துடியலூர் பகுதியில்
தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடித்து
விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது இயற்கை உபாதையை கழிக்க மோட்டார் சைக்கிளை
சாலையோரமாக நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென
அன்பை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே அந்த வாலிபர்கள் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500 பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அன்பு இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட ரத்தினபுரியை சேர்ந்த மணிமாறன் (22) மற்றும் சையது அன்வர் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.