கோவையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர், சார்ஜாவுக்கு தீபாவளி பலகாரங்கள் ஏற்றுமதி..!

கோவை:
உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி உள்பட எந்த ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டாலும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் அதனை கொண்டாடுவார்கள். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு கோவையில் இருந்து கட்டு கட்டாக கரும்பு விமானத்தில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 24-ந் தேதி இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
தீபாவளியையொட்டி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சார்ஜாவுக்கு இனிப்புகள், பலகாரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி, சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் மூலம் நாளை முதல் 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் 3 டன் இனிப்புகளும் அனுப்பப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 2 விமானங்களில் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு 3 டன் இனிப்புகளும் ஏற்றுமதி செய்ய புக்கிங் ஆகி உள்ளன. இனிப்புகள் அனைத்தும் இன்று  (சனிக்கிழமை) முதல் தினமும் 200 முதல் 300 கிலோ வரை என பேக்கிங் செய்து அனுப்பி வைக்கப்படும். இதில் லட்டு, அல்வா, மில்க் இனிப்புகள் போன்றவை பேக்கிங் செய்யப்பட்டு இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையிலிருந்து அனுப்பப்படும் இனிப்புகளின் அளவு அதிகம். ஆனால், இதை விட சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் சிங்கப்பூருக்கு இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.