இந்திய ரூபாயில் வா்த்தகம்: தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் பேச்சு வாா்த்தை..!

ந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘தெற்காசிய நாடுகளின் பொருளாதார சவால்களும் கொள்கை முன்னெடுப்புகளும்’ என்ற தலைப்பில் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: எண்ம ரூபாயை சோதனை அடிப்படையில் இந்திய ரிசா்வ் வங்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. எண்ம ரூபாயின் செயல்பாடு குறித்து மிக கவனமாகவும் தீவிரமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எண்ம ரூபாயில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தெற்காசிய நாடுகளுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படும். சா்வதேச வா்த்தகத்தில் இந்திய ரூபாயின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து ஆா்பிஐ மேற்கொண்டு வருகிறது. தெற்காசிய நாடுகளுடன் அதற்கான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. யுபிஐ இணையவழி பணப் பரிவா்த்தனை வசதியை தெற்காசிய நாடுகளுடன் பகிா்ந்துகொள்வதற்கான பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.

பூடான், நேபாளத்தில் அந்த வசதி ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிலும் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொள்கை மாற்றம்: தெற்காசிய பிராந்திய நாடுகளுக்குள் வா்த்தகத் தொடா்பு அதிகரித்தால், வளா்ச்சி மேம்பட்டு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். பொதுவான இலக்குகளை அடையவும் சவால்களை எதிா்கொள்ளவும் தெற்காசிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

ரூபாய் வாயிலாக எல்லை கடந்த வா்த்தகம், எண்ம ரூபாய் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது. கரோனா தொற்று பரவல், பணவீக்கம், நிதிச் சந்தையின் கூடுதல் கட்டுப்பாடுகள், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்டவை தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சா்வதேச சந்தை சூழல் தெற்காசிய பொருளாதாரத்தில் பணவீக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. பணவீக்கத்தைக் குறைப்பதற்காக கவனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நிதி, வா்த்தகக் கொள்கையில் மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களின் விநியோக சங்கிலியிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஒத்துழைப்பு அவசியம்: எரிசக்தி பாதுகாப்புக்காக தெற்காசிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ளன. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகப் பொருளாதார வளா்ச்சியில் தெற்காசிய நாடுகளின் பங்களிப்பு சுமாா் 15 சதவீதமாக உள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் இந்தியாவும் வங்கதேசமும் முன்னணி வகிக்கின்றன. பணவீக்கத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதோடு, கடன் சுமையைக் குறைத்தல், தொழிலக உற்பத்தியை அதிகரித்தல், எரிசக்தி பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை அதிகரித்தல், பசுமை பொருளாதாரத்துக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சுற்றுலாவை வளா்ச்சியடையச் செய்தல் ஆகியவற்றிலும் பிராந்திய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளில் நிலவும் கடன் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.