எனது மனைவியாகவே இருந்தாலும்.. இது பொருந்தும் .., மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.ன் அறிவிப்பு.. சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரும் திமுக.!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

அதில், “மழை பெய்தாலும் என்னை தான் திட்டுகிறார்கள், மழை பெய்யவில்லை என்றாலும் என்னை தான் திட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன், இன்று கட்சிக்காரர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே எழுந்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

சில நேரங்களில் எனக்கு தூக்கமே கிடையாது. என் உடம்பை பாருங்கள்” என்று தனது மனக்குமுறலை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருடைய அமைச்சர்களை, கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று, அதிமுக, பாஜகவை சேர்ந்த பிரபலங்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மறைந்த முதல்வரும் அதிமுகவில் நிறுவனரும் தலைவருமான எம்.ஜி.ஆர்., விடுத்த அறிவிப்பு ஒன்றை திமுகவினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், “மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுக்கும் முக்கிய அறிவிப்பு :அரசு நிர்வாகத்தில் சம்மந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை.

எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராகவே இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும், அரசு உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி, என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடக்கவேண்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.,ன் இந்த அறிவிப்பு குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.