இலவச மின் இணைப்பிற்கு லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் மின்வாரிய அதிகாரி… நடவடிக்கை எடுக்ககோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். தனக்கு மின் இணைப்பு தராமல் காலதாமதம் செய்தும், தனக்கு பிறகு விண்ணப்பளித்த அனைவருக்கும் இலவச மின் இணைப்பை பணம் பெற்றுக் கொண்டு இணைப்பு கொடுத்து உள்ளார்.
மேலும் நான் ஏற்கனவே விண்ணப்பத்துடன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளேன். மேலும் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே தனக்கு மின் இணைப்பு வழங்க முடியும் என்று கூறுகிறார். மேலும் எனது அண்ணன் மணி அவருடைய விவசாயநிலத்திற்கு மின் இணைப்பு கொடுக்க ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் இணைப்பு வழங்கினார். ஒரு மின் இணைப்பிற்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் மின் இணைப்பு வழங்குகிறார். இதை கேட்டால் நான் வாங்கும் பணத்தை மேல் அதிகாரிகளுக்கு பங்கு கொடுப்பதாகவும் இதனால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வருகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து தனக்கு இலவச மின் இணைப்பு வழங்கமாறும், லஞ்சம் வாங்கும் மின்வாரிய வணிக ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவை அளித்துள்ளார்.