இலங்கை சிறையில் இருந்து 21 மீனவர்களை விடுதலை செய்து, சென்னைக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் நேற்று ஜனவரி 5ம் தேதி, சென்னைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டதற்காக 240 இந்திய மீனவர்களையும் 35 இழுவை படகுகளையும் கைது மற்றும் பறிமுதல் செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளைக் கைப்பற்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை பிரிக்கும் குறுகலான நீர்நிலையான பாக் ஜலசந்தி, இரு நாட்டு மீனவர்களின் வளமான மீன்பிடித் தளமாகும்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. டிசம்பர் 18 அன்று, வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காரைநகர் கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட இழுவை படகுடன் குறைந்தது 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.