கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்த கல்லூரி பேராசிரியையை பைக் ஏற்றி கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர்
பழனிசாமி. இவரது மகள் சுதா (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள
கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மணியக்கார காலனியை சேர்ந்த லாரி
டிரைவர் ஜெயக்குமார் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் குழந்தைகள் இல்லை. ஜெயக்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து சுதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். அங்கு இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று சுதா கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே சென்ற போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை தனது மனைவி மீது ஏற்றினார். இதில் நிலை குலைந்த அவர் தடுமாறி கீழே
விழுந்தார். அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர்
ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து
தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுதாவை அந்த
வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் மனைவியை மோட்டார் சைக்கிள்
ஏற்றி கொலை செய்ய முயன்ற ஜெயக்குமார் மீது ஆபாசமாக பேசுதல், காயம்
ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்
உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.