தமிழகத்தை தாக்கும் கனமழை

மிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (மே 8) கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்புகளை இங்கே காணலாம்.

அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மத்திய பிரதேசம் முதல் கேரளா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழைப் பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 50 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.மே 9, 10 தேதிகளில்: மேற்கண்ட மாவட்டங்களுடன் திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 11 முதல் 13 வரை: தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை நீடிக்கும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் (99 டிகிரி ஃபாரன்ஹீட்) மற்றும் குறைந்தபட்சமாக 28டிகிரி செல்சியஸ் (82 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவில் பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் மற்றும் ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செங்கோட்டை, காளையார்கோவில், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.