கோவையில் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க 100 வார்டுகளில் 1000 ஏரியா சபை ஏற்படுத்த முடிவு..!

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 6 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர்
முழுவதும் புதிய சாலைகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல்,
தெருவிளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் தேவையை
பூர்த்திசெய்தல், சமுதாயக்கூடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள்
கட்டுதல், பூங்காக்கள் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட
அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வார்டுகளில் அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதில் தொய்வுகள் உள்ளதாக
புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு
முறையாக தெரிய வருவதில்லை. இந்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும், வார்டுகளில் உள்ள அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் மக்கள் மூலம் அறிந்து அவற்றை உடனடியாக தீர்க்கவும் அரசாணையின் அடிப்படையில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் ஏரியா சபை (பகுதி சபை) மற்றும் வார்டு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்துமு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: –
ஒவ்வொரு வார்டும் 10 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஏரியா சபை
என்றழைக்கப்படும். இதன் தலைவராக அந்த வார்டு கவுன்சிலர் இருப்பார்.
உறுப்பினர்களாக அந்த ஏரியாவுக்கு உட்பட்ட வாக்களிக்கும் தகுதியுடையவர்கள்
இடம் பெற்றிருப்பர். ஒவ்வொரு வார்டிலும் ஒரு வார்டு குழு அமைக்கப்படும். அதன் தலைவராகவும் வார்டு கவுன்சிலரே இருப்பார். செயலாளராக அரசு அலுவலர் ஒருவர்
நியமிக்கப்படுவார். ஒரு வார்டு குழுவுக்கு, அந்த வார்டுக்கு உட்பட்ட ஏரியா சபையில் இருந்து தலா ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து நியமிக்கப்படுவர்.
அதன்படி, வார்டு குழுவில் 10 பேர் இடம் பெறுவர். ஏரியா சபை, வார்டு குழு
குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்.

ஏரியா சபை கூட்டத்தில் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள்,
நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து வார்டு குழுவின் மூலம்
மாநகராட்சி நிர்வாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.
மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1000 ஏரியா சபைக்கள் ஏற்படுத்தும் பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி முடிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட
நாட்களுக்குள் அரசிதழில் வெளியிடப்படும். அதை தொடர்ந்து வார்டு குழு
ஏற்படுத்தும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.