மருந்து பற்றாக்குறை..? அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சோகம்..

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் மாவட்டத்தில் சங்கர்ரோ சவான் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பலரும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்த நிலையில் தான், இந்த அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பிறந்த 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை டீன் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகளும், 12 பெரியவர்கள் என 24 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்.. பெரும்பாலும் பாம்புக்கடிக்காக சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம்.

70-80 கி.மீட்டர் சுற்றளவில் இதுபோன்ற மருத்துவமனை ஒன்றுதான் உள்ளது. எனவே, நீண்ட தொலைவில் இருந்தும் நோயாளிகள் இங்கே வருகிறார்கள். சில நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. இது பிரச்சினையாக மாறுகிறது. ஹாஃப்கைன் சோதனை மையம் உள்ளது. நாங்கள் அங்குதான் மருந்துகளை வாங்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கு பதிலாக நாங்கள் மருந்துகளை லோக்கலில் வாங்கி நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம்” என்றார்.

இந்த சம்பம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மருத்துவமனையில் என்ன நடைபெற்றது என்ற விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மருத்துவமனையில் ஒரே நாளில் 24 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தை வைத்து ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மூன்று என்ஜின் கொண்ட அரசாங்கம் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு என்று விமர்சித்துள்ளனர்.

இதேபோல் இந்த சம்பவத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் விகாஸ் லவண்டே கூறுகையில், ” 12 குழந்தைகள் உள்பட 24 பேர் ஒரே நளில் உயிரிழந்துள்ளனர். விளம்பரம் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் மகாரஷ்டிரா அரசை பார்த்து வெட்கப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.